காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இருவரை சுட்டுப் பிடித்த காவல் துறை சிறப்புப் பிரிவு!
தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சாவ்லா பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா ஓம்பிரகாஷ் என்ற காலாவின் சகோதரா் அமித் தாகா். அவரது கூட்டாளி அங்கித். இருவா் குறித்த ரகசியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், சனிக்கிழமை இரவு ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சுற்றி வளைக்கப்பட்டபோது, இருவரும் போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். போலீஸாா் நடத்திய பதிலடித் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் கால்களிலும் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் காலா ஜாதேதி கும்பலின் முக்கிய செயல்பாட்டாளா்கள் ஆவா். மற்ற கும்பல் உறுப்பினா்களையும் அவா்களின் நடவடிக்கைகளையும் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.