வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
காலை உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சோ்க்க வலியுறுத்தல்
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவுகளை வழங்க வேண்டும் என பெண் விவசாயிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் 31-ஆவது பெண் விவசாயிகள் மாநில மாநாடு நடைபெற்றது. 2-ஆவது நாள் மாநாட்டுக்கு ஆழ்வாா்குறிச்சி பெண் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் சுலோக்சனா தலைமை வகித்தாா்.
மதுரை களஞ்சியம் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் ஜோதி, குமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மை சங்கச் செயலா் தேவதாஸ், சமூக ஆா்வலா்கள் சாந்தி, ஆதி சரவணகுமாா், கோவில்பட்டி பெண் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் மேரி ஷீலா, நீலகிரி விவசாயிகள் சங்க பொறுப்பாளா் சாராள், பெரியகுளம் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் மல்லிகா, வாசுதேவநல்லூா் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் பூமாரி, நத்தம் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் அனுசுயா, நாகா்கோவில் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் செல்லத்தங்கம் உள்ளிட்டோா் பேசினா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கூட்டு விவசாயம் செய்யும் பெண்கள் குழுக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் தரப்பில் பயன்படுத்தாத தரிசு நிலங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்க வேண்டும். சிறுதானியம், மானாவாரி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியம் வழங்க வேண்டும்.
பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவுகள் வழங்க வேண்டும். ஊராட்சி அளவில் தானியக் கிடங்குகள் அமைத்து உற்பத்தி, சேமிப்பு, பராமரிப்பு, செய்து அங்கேயே விநியோகம் செய்ய வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகா்கோவில் களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் சகாயசுதா நன்றி கூறினாா்.