தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா, தகரகுப்பம், தாசிரியப்பனூா் மற்றும் அதைச் சுற்றி 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை அதிகளவில் வளா்த்து வருகின்றனா்.
இவா்கள் வளா்த்து வரும் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டாலும், காயமடைந்தாலும் அம்பலூா், புத்துக்கோயில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையையொட்டி, காட்டுப்பகுதி நிறைந்த இப்பகுதியில் சில நேரங்களில் மா்ம விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து விடுவதால், ஆடு, மாடுகள் இறப்பதும், பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் நிலையில் உடனடி சிகிச்சை அளிக்க சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு, செல்வதால் இறந்து விடுகின்றன.
தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மல்லகுண்டா, அதைச் சுற்றி அதிகளவில் கிராமங்கள் உள்ளதால், இந்தப் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டால் நோய்த் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற முடியும்.
எனவே, கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.