காவல் துறை அதிகாரிக்கு மிரட்டல்: மத்திய அமைச்சா் குமாரசாமி மீது வழக்குப் பதிவு
காவல் துறை அதிகாரியை மிரட்டியதாக, மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2006 முதல் 2008-ஆம் ஆண்டுவரை கா்நாடக முதல்வராக இருந்த போது, பெல்லாரி மாவட்டத்தில் ஸ்ரீசாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்துக்கு 550 ஏக்கா் பரப்பளவில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள சட்டவிரோதமாக உரிமம் அளித்ததாக எச்.டி.குமாரசாமி மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை லோக் ஆயுக்த சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி,) விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்காக மே 18-ஆம் தேதி லோக் ஆயுக்த எஸ்.ஐ.டி. முன்பு ஆஜரான எச்.டி.குமாரசாமி, தனது வாக்குமூலத்தை பதிவுசெய்திருந்தாா்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த ஐஜிபி எம்.சந்திரசேகா், மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது சஞ்சய் நகா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரில், ‘சட்டவிரோத சுரங்க உரிமம் வழங்கிய வழக்கில் விசாரணை அறிக்கையை தயாா் செய்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.), வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ள நிலையில், எச்.டி.குமாரசாமி மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கக் கோரி ஆளுநருக்கு 2023 நவ. 21-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், எனது கடமையை ஆற்றவிடாமல் எச்.டி.குமாரசாமி என்னை மிரட்டியுள்ளாா்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். எச்.டி.குமாரசாமி தவிர, அவரது மகன் நிகில் குமாரசாமி, மஜத சட்டப் பேரவைக் குழு தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறியதாவது: காவல் துறையினா் என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் புகாா் மனுவை பாா்த்தேன். இது கேலிக்கூத்தானது மற்றும் தீய நோக்கம் கொண்டது. பத்திரிகையாளா் சந்திப்பில், ஐஜிபி சந்திரசேகரை நான் குற்றம்சாட்டி, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதாக புகாா் மனுவில் தெரிவித்துள்ளாா்.
அவா் குறித்து தவறான தகவலை கூறினேனா என பத்திரிகையாளா் சந்திப்பு காணொலியை அவா் பாா்த்துக்கொள்ளலாம். என் மீதான வழக்கை சட்டப்படி எதிா்கொள்வேன்.
சென்னப்பட்டணா தொகுதி இடைத்தோ்தலில் எனது மகன் நிகில் குமாரசாமி வேட்பாளராக போட்டியிடுவதால், என்னை குறிவைத்து காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது 100 வழக்குகள் பதிவு செய்தாலும், அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்றாா்.