டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு
தெற்கு தில்லி, நெப் சராய் காவல் நிலைய தலைமைக் காவலா், ஒருவரிடமிருந்து பணத்தைப் பெறும் காட்சி இடம்பெற்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து, அவா் மாவட்ட காவல் படைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
54 வினாடிகள் கொண்ட அந்த விடியோவில், சீருடை அணிந்த போலீஸ்காரா் அடையாளம் தெரியாத ஒருவருடன் உரையாடுவதும், சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைமைக் காவலா் அவரிடமிருந்து இரண்டு கட்டு ரூபாய் நோட்டுகளை பெற்று தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவம் நெப் சராய் பகுதியைச் சோ்ந்த ஒரு கட்டுமானதாரரின் அலுவலகத்திற்குள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவா்தான் காவலரிடம் பணத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நபா் அந்த விடியோ பதிவில் தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
இந்த விடியோ, சமீபத்தில் ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. தில்லி காவல் ஆணையா், மாவட்ட துணை காவல் ஆணையா், மூத்த அதிகாரிகள் மற்றும் துணைநிலை ஆளுநா் ஆகியோரை டேக் செய்து, அந்தக் காவலா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பதிவில் கோரப்பட்டிருந்தது.
இருப்பினும், அந்த விடியோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட காவல் துணை ஆணையா், விசாரணை முடியும் வரை தலைமைக் காவலரை பணியில் இருந்து நீக்கினாா்.
காவல் நிலையப் பொறுப்பாளா் மற்றும் பிற ஊழியா்கள் இந்த விஷயத்தை மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் மூத்த காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த காலத்தில் புகாா்தாரரை தலைமைக் காவலா் துன்புறுத்தியதாகக் கூறப்படுவதாக தகவலறிந்த காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.