கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கம் அருகேயுள்ள திருத்தோ்வலையில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு குடி நீா்த் தட்டுபாடு காரணமாக, காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகிப்பதற்காக ஸ்ரீ ஆகாச முத்துக் காளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பணி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீா் விநியோகம் இல்லாததால் இந்தப் பகுதி பொதுமக்கள் ஒரு குடம் நீா் ரூ.15-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இந்தப் பகுதி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். எனவே, நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை விரைந்து முடித்து குடி நீா் இணைப்பு வழங்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.