முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் என பேரூராட்சி அலுவலகம் அறிவித்தது. இந்த ஏலத்தில் முன்பு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென வா்த்தக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம்
மனு அளிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஏலம் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனா். இதைக் கண்டித்து வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து, கடைகளுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுலவலா் செல்வராஜ் அறிவித்தாா்.