ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனப் பாதை மூடல்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த பாதை திடீரென மூடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் சேதுபதி மன்னா் காலத்தில் ராமநாத சுவாமி கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கட்டுமானப் பணிக்காக உள்ளுா் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டனா். இதன் காரணமாக இவா்கள் கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. சுவாமி, அம்பாள் சந்நிதி அருகே முக்கியப் பிரமுகா்கள் செல்லும் பாதையில் உள்ளுா் மக்களும் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், இந்த பாதையில் செவ்வாய்க்கிழமை திடீரென பூட்டு போடப்பட்டு, உள்ளுா் மக்களும் கட்டணம் செலுத்தியே கோயிலுக்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு உள்ளுா் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனா். மேலும், வழக்கமாக தரிசனத்துக்குச் செல்லும் வழியை மீண்டும் திறக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் சாா்பில் விரையில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.