கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. வலதுபுற கால்வாயில் விநாடிக்கு 75 கனஅடி, இடதுபுற கால்வாயில் விநாடிக்கு 75 கனஅடி என மொத்தம் 151 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் பெரியமுத்தூா், சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்டஅள்ளி, காலேவேஅள்ளி, தளிஅள்ளி, மிட்டஅள்ளி, குண்டலப்பட்டி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வர மடம், பாலேகுளி, காவேரிப்பட்டணம், மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி (ஜெகதாப்) பையூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கா் நன்செய் நிலங்கள் பயன்பெறும்.
கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.95 அடி தண்ணீா் உள்ளது. நீா்வரத்தை கணக்கில்கொண்டு 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், வேளாண் துறை இணை இயக்குநா் காளியப்பன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் பொன்னிவளவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.