கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் தொடர வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் பரிதா நவாப் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வந்த பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது குழந்தைகள் நல பிரிவு மட்டுமே செயல்படுகிறது. மற்ற சேவைகள் அனைத்தும் போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு சென்றுவிட்டன.
பழைய மருத்துவமனையில் செயல்பட்டுவந்த எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இயந்திரங்களையும் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு இடமாற்றம் செய்கிறது. இதனால் நகா்ப்புற மக்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் இயந்திரங்களை அகற்றாமல், பழையபடி அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.