செய்திகள் :

கீழடி: `அமர்நாத் அறிக்கை வெளியாவது சிலருக்கு பிடிக்கவில்லை; காரணம்..!’ - பாலகிருஷ்ணன் IAS

post image

கீழடி தொடர்பாக ஆய்வு செய்த ASI ( Archeological Survay of India) ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன், அதனை இந்திய தொல்லியல் துறைக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வு அறிக்கையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று திரும்ப அனுப்பியுள்ளது இந்திய தொல்லியல் துறை. இதற்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதனுடைய பின்னணி என்ன? இதில் பண்பாட்டு அரசியல் இருக்கிறதா?... இப்படி பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டு அறிந்துக் கொள்ளலாம்.

கிளியோபாட்ரா பானை

``கீழடி தொடர்பான ஆய்வுகள் நடந்த போதிலும், அது வெளியான போதிலும் நிறைய பரபரப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஏன் கீழடி முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

``கீழடி அகழ்வாராய்ச்சியானது எந்த காலகட்டத்தில் நடந்தது என்பது மிகவும் முக்கியமானது. இதே அகழ்வாராய்ச்சி ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தால் அது அவ்வளவாக கவனம் பெற்று இருக்காது. ஆனால் தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அது பெரிதும் பேசப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் லீ என்பவர் ஆதிச்சநல்லூரில் உள்ள பல தகவல்களை வெளியில் கொண்டு வந்தார். அதன் பிறகு அந்த இடத்தில் 100 வருடங்களாக யாருமே போகவில்லை. கீழடி அகழ்வாராய்ச்சி 2014-2015 ஆகிய காலகட்டங்களில் நடக்கத் தொடங்குகிறது.

அது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய தொடங்கிய காலம். மதுரை என்பது பழங்காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு நகரமாகவும், தமிழ்நாட்டினுடைய பண்பாட்டு தலைநகரமாகவும் இருக்கின்றது. அங்கு தான் தமிழ் சங்கங்கள் நாம் தொடர்புப்படுத்துகிறோம்.

மதுரையை சுற்றி தமிழீ கல்வெட்டுகள், பாறை கல்வெட்டுகள், திருப்பரங்குன்றம், அழகன்குளம் என பல்வேறு கல்வெட்டுகள் அங்கு கிடைத்திருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட கவனம் பெறுகின்ற இடத்தில் ஒரு குடியிருப்பு இருந்திருக்கலாம் என இந்திய தொல்லியல் துறையின் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யும் பொழுது அது கவனம் பெறுகின்றது. அந்த இடத்தில் அகழாய்வின்போது கட்டுமானங்கள், தரைக்கு கீழே உள்ள வடிகால் முறை, தொழில் கூட அமைப்பு, ஆடை நெய்தல் தொழிலோடு தொடர்புடைய பொருட்கள் என நிறைய பொருட்கள் கிடைக்கிறது.

அங்கு இருக்கின்ற கட்டட முறை கட்டுமானம் ஆகியன ஒரு நகர அமைப்பை சார்ந்து இருக்கிறது என்பதனை அவர் உணர்ந்து கொண்டார். திராவிட மொழிகளிலே மிகவும் தொன்மையான மொழியாக விளங்கக்கூடிய தமிழில் இருக்கக்கூடிய சங்க இலக்கியங்கள், நகர நாகரிகத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. சங்க இலக்கியங்கள் பேசுகின்ற நகர வாழ்வியலுக்கும், நமக்கு கிடைக்கின்ற பொருள்களுக்கும் தொடர்பு இல்லாதது போல் இருந்தது. சிந்துவெளி ஹரப்பா போன்ற நாகரீகங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்னைகள் என்னவென்றால், தரையில் தோண்டப்பட்டு கிடைத்த பொருள்களுக்கு ஏற்றபடி இலக்கியங்கள் எதுவும் இல்லை. வட மேற்கு இந்தியாவை பற்றி, தரைக்கு கீழே தோண்டப்பட்ட நிறைய பொருள்களுக்கு வெளியே இலக்கியம் என்பது இல்லை. எனவே இது இலக்கிய வெற்றிடம். நம்முடைய தென்னிந்தியாவை பொறுத்தவரைக்கும், நம்முடைய இலக்கியங்கள் பேசுகின்ற வனப்பு பெருமிதம் போன்ற விஷயங்களுக்கு தரைக்கு கீழே தொல்லியல் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே இது அகழாய்வு வெற்றிடம். எனவே நாம் அகழாய்வு செய்யும் பொழுது நிறைய பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த சூழலில் தான் அவர் அகழாய்வு மேற்கொள்கிறார். அவர் ஏற்கனவே வட இந்தியாவில் பணியாற்றிய அனுபவம் இருந்த்தினால், சிந்துவெளி ஹரப்பாவில் கிடைத்தது போல, கீழடியில் கிடைக்கின்ற பொருள்களும் ஒரு நாகரீகத்தை வெளி காட்டுவதாக சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டு வந்தார். ஆனால் அப்போது யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஹரப்பா பண்பாடுகளைப் போன்றே தொடர்புடைய ஒரு பண்பாடு கீழடியில் உள்ளது என்று 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஆங்கில செய்தித்தாள்களில் செய்தியாக வெளியானது. அதன் பிறகு தான் மிகப்பெரிய அளவில் அது பேசப்பட்டது. இதுதான் ஆய்வறிக்கை தாமதமானதற்கும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதற்கும், அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் காரணமாகும்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழ்வாராய்ச்சியை முதலாம் கட்டம் இரண்டாம் கட்டமாக நடத்துகிறார். அதன் பிறகு அவர் இடம் மாற்றம் செய்யப்படுகிறார். மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி 2017 ஆம் ஆண்டு நடத்தப்படுகிறது. மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியை நடத்த மற்றொரு புதிய அதிகாரி வருகிறார். அந்த மூன்றாம் கட்ட அகல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது, நகர்மையும் என்று சொல்லும் அளவிற்கு புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள். 2016 ஆம் ஆண்டு செய்தி வெளியான பிறகு நான் அந்த இடத்திற்கு சென்று பார்த்தேன்.

மிகப்பெரிய அளவில் தான் எனக்கு அந்த அகழ்வாராய்ச்சி இருந்தது. ஆனால் பின்னால் வந்த அதிகாரிகள் அதனை பெரிதாக பேசவில்லை. அவர்களே பெரிதாக எடுக்கவில்லை, எடுத்துப் பேசவில்லை எனும் பொழுது தமிழ்நாடு அரசு அதனை எளிதாக விடவில்லை. தமிழ்நாடு தொல்லியல் துறை அதனை கையில் எடுத்து உரிமையைப் பெற்று இவர்கள் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ்நாடு பொறுத்த வரைக்கும் பெரும்பாலான விஷயங்களில் முன்னிலையில் இருக்கும்.

1958 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக பொது நூலக சட்டம் ஒன்றை உருவாக்கி பொது நூலகத்தை உருவாக்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல்தான் இந்திய தொல்லியல் துறை என்று உள்ளதை மாநிலங்களுக்கு என தனியாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஒன்றை உருவாக்கியது. கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வில் இருந்து பத்தாம் கட்ட அகழாய்வு வரைக்கும் தமிழ்நாடு அரசு தான் எடுத்து நடத்தி இருக்கிறது. அதன்பிறகு கிடைத்த பொருட்களை வைத்து தான் கீழடி அருங்காட்சியகம் என்பதனை தற்பொழுது தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது.

அப்படி என்றால் நாம் எவ்வளவு பெரிய ஒரு வாய்ப்பை இழந்திருப்போம் என்று நீங்கள் பாருங்கள். எனவே கீழடி, சிவகலை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அழகன்குளம், வெப்பகோட்டை போன்ற இடங்களில் நடக்கின்ற அகழாய்வுகள் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் கீழடி என்பது ஒரு மைல் கல். அதுதான் ஒரு பெரிய திருப்பத்தை கொண்டு வந்த இடம்.”

``ஏன் கீழடியில் இருக்கின்ற உண்மைகளை வெளியில் வர கூடாது என்று நினைக்கிறார்கள்?”

``இப்போது நாம் அசோகரை பற்றி வரலாற்று புத்தகங்களில் படிக்கிறோம். அவர் சத்திரங்கள் கட்டினார் சாவடிகள் கட்டினார், மரங்களை நட்டார் என்று படிக்கிறோம். அசோகர் என்ற ஒரு பேரரசர் இருந்தார் என்பதனை ஐரோப்பிய அறிஞர் ஜேம்ஸ் பிரிட்ஸ்அப் என்பவர் கூறிதான் நமக்கு எல்லோருக்கும் தெரியும். அவர் கண்டுபிடித்து சொன்னதுதான் தமிழ் பிராமி என்ற எழுத்து வடிவம். அவர் சொல்லவில்லை என்றால் நாம் அசோகரே யார் என்று தெரியாமல் வாழ்ந்து இருப்போம். 192-ஆம் ஆண்டு ஜான் மார்ஷல் ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகங்களை கண்டுபிடித்து சொல்லாமல் போயிருந்தால் இங்கு வரலாறு மாறி இருக்கும்.

நாம் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்ததுனாலும் கல்வி அறிவில் வளர்ந்துவிட்டதனாலும் எதிர்த்து நாம் கேள்வி கேட்கிறோம். இந்த மாற்றம் தான் அவர்களின் அச்சுறுத்துகிறது. வரலாறு என்பது ஒரு சலுகை கிடையாது. வரலாறு என்பது உங்களுடைய உரிமை. கடந்த காலத்தை சரியாக நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால் நிகழ்காலத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. கடந்த காலம் நிகழ் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தை திட்டமிடவே முடியாது. அதுவே கடந்த காலத்தைப் பற்றி புரிதல் தேவைப்படுகிறது. சரியான புரிதல் என்பது தேவைப்படுகிறது. புதிய தரவுகள் சிலரை அச்சுறுத்துகிறது. எனவேதான் அறிக்கை தாமதப்படுத்துகிறது. இந்த அறிக்கை தாமதப்படுத்துவதில் எனக்கு வியப்பேதுமில்லை. இது தாமதமில்லாமல் வந்திருந்தால் தான் நான் வியப்பு அடைந்திருப்பேன்.

இது போன்ற அவர்கள் முதல் முறையாக தாமதப்படுத்தவில்லை. இது ஏற்கனவே நடந்துள்ளது. 1904 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் லீ என்பவர் ஆதிச்சநல்லூர் பகுதியை கண்டுபிடிக்கிறார். 1935 ஆம் ஆண்டு கே என் தீட்சித் என்பவர் சொல்கிறார், இந்த இடத்தை தோண்டினால் சிந்துவெளியோடு தொடர்புடைய தரவுகள் கிடைக்கக்கூடும். 1935 ஆம் ஆண்டிலேயே திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் இவ்வாறான தகவல்கள் கிடைக்கும் என்று அப்போதே சொல்கிறார். 2004 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பகுதிக்கு சத்தியமூர்த்தி செல்கிற வரைக்கும் அந்தப் பகுதிக்கு யாருமே செல்லவில்லை. 2014-15 காலகட்டத்தில் கீழடி பகுதிக்கு அமர்நாத் ராதாகிருஷ்ணன் சொல்கிற வரைக்கும் அந்தப் பகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை.

சத்தியமூர்த்தி எங்களுக்கு சொன்னார், ஆதிச்சநல்லூரில் கிடைக்கின்ற செம்பு உலோக பொருட்களில் உள்ள ஆர்சனிக் வேதிப்பொருள் ஹரப்பாவில் கிடைத்த உலோகப் பொருட்களில் உள்ளது போன்றே ஒத்துப் போகிறது என்று கூறினார். அதனை அவர் அறிக்கையாக எழுதி சமர்பித்தார். அது வெளியாகும் என்று நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தோம். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊடகவியலாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அதன் பிறகு ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அந்த அறிக்கை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2019 ஆம் ஆண்டு வெளியானது. அது அப்போது பெரிதாக பேசப்படவில்லை. எனவேதான் அறிக்கை வெளியிடுவதில் தாமதப்படுத்துவதில் எனக்கு இது புதிதாக ஒன்றும் தெரியவில்லை.

என்னைப் போன்ற ஒரு ஆட்கள் எல்லாம் உண்மையைத் தேடி தான் செல்வார்கள். உண்மையை தான் தரவாக சேமிப்பார்கள். இன்றைக்கு நாம் சரி என்று நினைப்பது நாளை தவறாக கூட மாறிவிடலாம். அதற்காக தான் ஓப்பன் மைண்டாக எதனையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். நிறைய பேர் அவர்கள் நினைத்தது போல் நடந்தால் அது நல்லது, அப்படி நடக்கவில்லை என்றால் அது கெட்டது என்று நினைத்துக் கொண்டு பயணிக்கின்றனர். நான் கேள்விப்பட்ட வரைக்கும், அறிக்கை ஒன்றைக் கொடுத்தால் அதில் உள்ள பிழைகள், கிராமர் மிஸ்டேக் போன்றவற்றை தான் பார்ப்பார்கள். இந்த காலகட்டத்தை நீங்கள் மாற்றிய ஆக வேண்டும். இதனை சரியாக தான் கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்புவது இதுதான் முதல் முறை. அப்படி அவர்கள் முதல்முறையாக இது போன்ற நடைமுறை மேற்கொள்ளும் பொழுது, கீழடி விவகாரத்தில் ஏன் இதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.”

``கீழடி தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோன்று மற்ற இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளை நாம் கேள்வி எழுப்புகிறோம். எனவே இது நடைமுறையாகத் தான் உள்ளதா? அல்லது வேறு எதேனும் காரணமா?”

``நீங்கள் கட்டுகதை பேசுகிறீர்களா அல்லது அகழாய்வு தரவுகள் வைத்து பேசுகிறீர்களா என்பதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கீழடி, கொடுமணல், அரிக்கமேடு, கேரளாவில் உள்ள பட்டினம் போன்ற பகுதிகளில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு இதிலிருந்து வெளிநாட்டு வர்த்தகங்கள் நிறுவப்பட்டது என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது.

பட்டினத்திலிருந்து ரோமாபுரி வரைக்கும் தொடர்பு இருந்தது என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது. இதனை தான் பட்டினத்தில் கிடைக்கக்கூடிய பொருட்களும், அரிக்கமேட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களும் அதனை தான் நிறுவுகிறது.

சங்க இலக்கியமும் அதனை தான் சொல்கிறது. அரிக்கமேட்டில் கிடைத்த எம்புரா என்று சொல்லக்கூடிய மது ஜாடியில் உள்ள திராட்சை மது ரோமில் உள்ள எந்த அரசரிடம், எந்த பகுதியில் கிடைத்த திராட்சை மது என்பதனை கெமிக்கல் டெஸ்ட் புரூப் செய்வதாக எழுதியுள்ளனர். இதனை தான் சரியான தரவுகள் என்று நாம் சொல்கிறோம்.

மகாபாரத கதை உள்ளது. அந்த கதை எழுதப்பட்ட பொழுது மகாபாரதம் அது நடந்த காலமா, அல்லது அது எழுதப்பட்ட காலமா என்பது அறியப்படவில்லை. அதேபோல அதற்கான அகழ்வாராய்ச்சி தரவுகளும் எங்கு உள்ளது? கீழடியில் கிடைக்கக்கூடிய பகடைகள் போன்றே சங்க இலக்கியத்திலும் பகடைகள் குறித்து பேசப்படுகின்றன. கடலிலிருந்து வந்த ஆமை, கடற்கரையில் மணலுக்கு இடையில் யாருக்கும் தெரியாமல் முட்டையிட்டு செல்கிறது.

அதனுடைய முட்டையானது, தந்தத்திலான பகடை போன்று காட்சியளிப்பதாக ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் அந்தப் பகடை அறுங்கோணமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கோணத்தில் இருப்பதை நமக்கு விளக்குகிறது. நான் கூட அந்த இரண்டு படங்களை எடுத்து என்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். ஹரப்பாவிலும், குஜராத் லோத்தல் பகுதிகளிலும் கிடைக்கக்கூடிய பகடைகள் போன்று கீழடியிலும் பகடைகள் கிடைப்பது என்பது ஒரு சாதாரண விஷயமா என்ன. இது போன்ற இலக்கிய தளமும், அகழாய்வு தளமும் கைகுலுக்கி கொண்ட தருணம் வேறு எங்கு நடந்துள்ளது. அப்படி நடந்தால் அதனை எடுத்துக்காட்டுங்கள்.”

``மண்ணில் கிடைக்கக்கூடிய பொருட்களை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி இருந்தும் இது அரசியல் படுத்தப்படுகிறதா?”

``இது பண்பாட்டு அரசியல். அரசியல்களுக்கு எல்லாம் அடிப்படையானது பண்பாட்டு அரசியல்தான். அரசியல் கட்டமைக்கப்படுவது பண்பாட்டு அரசியலில் இருந்துதான். பண்பாடு இல்லாமல் அரசியல் இருக்கலாம், ஆனால் அரசியல் இல்லாத பண்பாடு என்பது இல்லவே இல்லை. ஒரு நாட்டினுடைய அரசியல் கட்டமைக்கப்படுவதே இந்த பண்பாடை வைத்து தான். கிடைக்கக்கூடிய சான்றுகளை இலக்கியத்துடன் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு பானை கிடைக்கிறது என்றால் அந்த பானையில் உள்ள நுண் சுருள்களை கண்காணித்து இத்தாலியில் இருந்து அறிக்கை பெறுகிறார்கள். அங்கு கிடைக்கக்கூடிய விலங்குகளுடைய எலும்புகள் ஆய்வு செய்ய புனேவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எருமை மாடு, பன்றி, திமில் உள்ள காளை என்பன போன்றவைகள் தமிழ்நாடு அரசு அறிக்கை பெற்றுக் கொண்டார்கள். இது போன்ற வசதிகள் முன்பு இல்லை. இப்போதுள்ள வளர்ச்சியின் படி நாம் இருக்கின்ற இடத்திலிருந்து பொருள்களை அனுப்பி அதனுடைய காலகட்டம் தரவுகள் போன்றவற்றை பெற்றுக் கொள்ளலாம். அந்த வசதி நமக்கு கிடைத்துள்ளது. எனவே தரவுகள் தான் நம்மை வழிநடத்த வேண்டும்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய அறிக்கையில் ஏதாவது ஒரு கருத்து வேறுபாடு இருந்தால் அது பொதுவெளியில் கொண்டுவரப்படுகிறது. அதை கேள்விக்கு உள்ளாக்க்கபடும், பரிசீலிக்கப்படும். அதேபோன்று நிறைய முறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.”

``இன்றைக்கு தமிழுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பிரதமர் மோடி தமிழ் குறித்து நிறைய பேசுகிறார். அப்படி இருக்கும் சூழ்நிலையில் இங்கே ஒரு அரசியல் நிலவுகிறது என்பதனை நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?”

``தமிழில் மிகவும் தொன்மையான இலக்கணம் தொல்காப்பியம். அதுவும் இன்றைக்கு நமக்கு கைக்கு கிடைக்க கூடியது அதுதான். தொல்காப்பியரே எனக்கு முன்னால் கூறிய இலக்கண ஆசிரியர்கள் சொன்னது போல என்று மேற்கோள் காட்டுகிறார். எனவே அதற்கு முன்னராகவே இலக்கண நூல்கள் இருந்திருக்கும். 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியார் மதுரை காஞ்சியில் ஒரு வரியை எழுதும் போது, “தொல் முது கடவுள்“ என்று குறிப்பிட்டு எழுதுகிறார். தொல் முது கடவுள் என்பது அகத்தியரை தான் குறிக்கிறது என்று 14 ஆம் நூற்றாண்டில் யாராவது சொன்னால் அதனை அக்கால மக்கள் ஏற்றுக்கொண்டு சென்று இருக்கலாம்.

ஆனால் 21ம் நூற்றாண்டில் வாழ்கிறவர்கள் அவர் என்ன தொல்முது கடவுளா? என்று கேள்வி எழுப்புவார்கள். ஒரு காலகட்டத்தில் நாம் என்ன நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் தொல்காப்பியருக்கே அகத்தியர் தான் தமிழை சொல்லிக் கொடுத்தார். அவர்தான் வேளாண்மை சொல்லிக் கொடுத்தார். அவர்தான் காவிரி நீரை கொண்டு வந்தார் என்று எல்லாம் பேசிக் கொண்டு இருந்தோம்.

நாங்கள் எல்லாம் படிக்கும் பொழுது அகத்தியர் என்றால் சீர்காழி கோவிந்தர் தான். அந்தப் படத்தை தான் பார்த்துக் கொண்டிருப்போம். அதனை சினிமாவாக பார்ப்பதற்கும் அறிவியல் உண்மையாக பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அண்மையில் அகத்தியர் மீண்டும் மேடையற்றப்பட்டார். ஒன்றிய அரசனுடைய பல்வேறு நிறுவனங்களினால் அகத்தியர் மீண்டும் மேடையற்றப்பட்டார். தொல்காப்பியர் பேசப்படவில்லை.

அகத்தியர் பற்றி பேச வேண்டிய சூழல் என்ன நேர்ந்திருக்கிறது. அவர் ஒரு மருத்துவ நூலை எழுதியவர். அவர் பேரில் நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இலக்கியம் என்று கொண்டாட கூடிய அளவில் எதுவும் இல்லை. அவர் பெயரில் உள்ள இலக்கியம் தற்பொழுது உள்ள மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது. அது இடைச்செறுகள், பிம்ப கட்டமைப்பு என்று நன்றாக தெரிகிறது. அகத்தியரின் தமிழையும் இணைத்து ஒரு கட்டுக்கதையை உருவாக்கி ஒரு விபத்தை உருவாக்க முடியும் என்றால் அதற்கு இவ்வளவு செலவழிக்க முடியும் என்றால் அதற்குப் பெயர்தான் பண்பாட்டு அரசியல்.

கீழடிக்காக தங்களுடைய நிலத்தை கொடுத்த பல்வேறு மக்களை நான் சந்தித்திருக்கிறேன். அதனை முதன் முதலாக வெளி கொண்டு வந்த ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களையும் சந்தித்துள்ளேன். அரசாங்கம் நிலத்தை எடுத்துக்கொண்டு திரும்ப தருவார்களோ என்று பல பேர் பயப்படுவார்கள். ஆனால் கீழடியில் சென்று பார்த்தல் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது பக்கத்து நிலத்துக்காரர் எங்களுடைய நிலத்தை வேண்டுமானாலும் எடுத்து ஆராய்ச்சி செய்யுங்கள். நான் விவசாயம் செய்யாமல் இருக்கிறேன். அவருடைய நிலத்தில் வரலாற்று தடயங்கள் இருப்பது அவருக்கு பெருமிதம். வரலாறு என்பது ஒரு சமயத்தினுடைய பெருமை, வரலாறு என்பது ஒரு சமூகத்தினுடைய உரிமை. எனக்குத் தெரிந்தவர்கள் என்னுடைய நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என பலரும் தற்பொழுது கீழடிக்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். எனவே முதல் இரண்டு அறிக்கைகளை தாமதப்படுத்துவது என்பது தேவையற்றது என்று தான் நான் நினைக்கிறேன்.”

``பண்பாட்டு அரசியலை எதிர்த்து தமிழ்நாடு அரசும் ஆய்வு அறிஞர்களும் என்ன செய்ய வேண்டும்?”

``தொடர்ந்து தோண்டி அகழாராய்ச்சி செய்ய வேண்டும். இதற்கு நான் தோண்டாத துயரம் என்று பெயர் வைத்துள்ளேன். தோண்டாத துயரத்தை நீங்கள் தோண்டிதான் தீர்க்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நிறைய அகழாய்வு தடயங்கள் தோண்டப்படாமல் இருக்கின்றன. அதனைத் தோண்டுவதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை. தோண்ட தோண்ட நிறைய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவே தமிழ்நாடு தொல்லியல் துறை இன்னும் மிக சிறப்பாக செயல்பட வேண்டும். தோண்டாமல் இவ்வளவு துயரம் ஏற்படுகிறது என்றால், தோண்டியது பற்றி அறிக்கை வெளியிடாமல் இருப்பது பெருந்துயரம். அதுபோன்ற பெருந்தயரத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை செய்வதில்லை.

அவ்வபோது ஆய்வு அறிக்கை, தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மொழி சார்ந்த முன்னெடுப்புகளை தொடர்ந்து கொண்டு வர வேண்டும். இந்திய துணை கண்டம் என்பது ஒரு நிலப்பரப்பு. ஒரு பகுதியில் இருந்து ஒரு மனிதன் மற்றொரு பகுதிக்கு நடந்து கொண்டே தான் இருக்கின்றான். அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் தான் என மரபணு சொல்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து நடந்து, ரஷ்யா சீனா பகுதிக்கு சென்றான் என்று சொல்லும்பொழுது, இந்தியாவிற்கு உள்ளேயே ஒரு பகுதிக்குள் இன்னொரு பகுதிக்கு செல்ல மாட்டானா என்ற கேள்வி எழுகிறது. எனவே பண்பாடு என்று பேசும்பொழுது இந்திய துணை கண்டத்தை மறுத்துவிட்டு எவ்வாறு பேச முடியும். இந்திய துணை கண்டத்தை புரிந்து கொண்ட வேறு ஏதாவது இலக்கியம் சங்க இலக்கியத்தைப் போன்று இருக்கிறதா.

சங்க இலக்கியத்தில் ஒட்டகம் வணிகர்களுடைய சுமையை சுமந்து செல்லும், அவ்வாறு செல்லும் பொழுது பட்டினியினால் அங்கு இறந்து கிடக்கும் விலங்குகளின் உடலை சாப்பிடும் என்கிற உண்மை சங்க இலக்கியத்தை தவிர வேறு எங்காவது பதிவு செய்யப்பட்டிருக்கிறதா. ஒட்டகம் என்பது சங்க இலக்கியத்திற்கு எவ்வாறு தெரிய வந்திருக்கும். நம் பகுதிக்கு மாடு தான் வணிகச் சுமையை எடுத்து செல்லும். சங்க இலக்கியத்தில் ஒட்டகம் எப்படி வந்தது. இதனை எல்லாம் பார்த்து தான் நான் ஒன்றை சொல்கிறேன் சங்க இலக்கியம் என்பது ஒரு மாநிலத்துக்கான இலக்கியமோ, அல்லது மாவட்டத்திற்கான இலக்கியமும் அல்ல. சங்க இலக்கியம் என்பது இந்திய துணை கண்டத்திற்கான இலக்கியம்.

தமிழ் மொழி என்பது மாநிலத்தின் மொழி அல்ல, இது நாகரீகத்தின் மொழி.எனவே தான் நாகரீகத்திற்கான உரிமைக்கோரல் என்று நான் இதனை பதிவு செய்கிறேன். இந்த துணை கண்டத்தின் உடைய உரிமை கோரும் மொழியாக தமிழ் உயர்ந்து நிற்கிறது. உரிமை கோரும் இலக்கியமாக சங்க இலக்கியம் நிற்கிறது. அதற்கான புதிய புதிய தரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்காக நாம் தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருக்க வேண்டும்."

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

"நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்" என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு... மேலும் பார்க்க

Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK| Imperfect Show 28.5.2025

* ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு!* திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி!* மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு* மாந... மேலும் பார்க்க

TVK : 'உதயநிதி ஒரு சோட்டா பச்சா; திமுக ஒரு ஸ்டிக்கர் அரசு' - தவெக கொ.ப.செ ராஜ் மோகன்

'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக சார்பில் அக்கட்... மேலும் பார்க்க

’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள ந... மேலும் பார்க்க

ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்

வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ர... மேலும் பார்க்க

மொழி விவகாரம்: "தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது; மொழியில் சர்ச்சைகள் வேண்டாம்" - அன்புமணி

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது தற்போது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது.இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராம... மேலும் பார்க்க