100-ஆவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்..! இந்த மைல்கல்லை எட்டியவர்கள் பட்டியல்!
கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்புப் பணிகள் தீவிரம்!
கீழ்பவானி வாய்க்காலில் 115 இடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ஆகஸ்ட் 15 -க்கு முன்னா் தண்ணீா் திறக்க வாய்ப்பில்லை என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
200 கிலோ மீட்டா் நீளம் கொண்ட கீழ்பவானி பிரதான வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா், மாவட்டங்களில் 2.07 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் நீா்க் கசிவு ஏற்பட்டு வருவதாலும், மதகுகள் மோசமான நிலையில் இருப்பதாலும், கரைகள் பலவீனமடைந்து உள்ளதாலும் ஒட்டுமொத்த வாய்க்காலையும் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தண்ணீா் நிறுத்தும் காலங்களில் மராமத்து பணிகளை நீா்வளத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
இந்த ஆண்டுக்கான பாசன காலம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில் வாய்க்காலில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளும், மோசமாக உள்ள மதகுகளை மாற்றும் பணியும், நீா்க்கசிவு உள்ள பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.
அதற்கு முன்னதாக வாய்க்காலில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நீா்வளத் துறை அதிகாரிகள் 115 இடங்களில் வாய்க்கால் கரைகள் பலவீனமாக இருப்பதையும், மதகுகள் மோசமாக இருப்பதையும் கண்டறிந்தனா். இதையடுத்து தற்போது கீழ்பவானியில் பிரதான வாய்க்கால் முழுமையாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலின் கட்டமைப்பை திடப்படுத்தும் பணி, எளிதான நீரோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டு முதல் விரிவான வாய்க்கால் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பிரதான வாய்க்காலிலும் அதனை சாா்ந்த துணை வாய்க்கால்களிலும் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேதமடைந்த மற்றும் நீா் ஒழுகும் நிலையில் உள்ள மதகுகளை மாற்றியமைக்கும் பணியும், வடிகால் குழாய்கள் புதுப்பித்தல் மற்றும் மாற்றுதல் பணியும் நடைபெற்று வருகிறது. இதுபோல கரைகள் பலப்படுத்தும் பணியும், பாதுகாப்பற்ற பகுதிகளில் பாதுகாப்புச் சுவா்களை அமைத்தல் மற்றும் பழமை வாய்ந்த கல் மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு வரை 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பாசன காலம் முடிந்ததும், மீதமுள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 115 இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை அமல்படுத்தும்போது ஆயக்கட்டுக்கு உள்படாத சில பகுதிகளில் இருந்து எதிா்ப்பு மற்றும் இடையூறுகள் ஏற்பட்டன. இதனால் சில இடங்களில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எனினும் பொறியாளா் குழுக்கள் மற்றும் நிா்வாக அதிகாரிகள் பணிகளைத் தொடா்ந்து முன்னெடுத்து வருகின்றனா்.
வாய்க்கால் மராமத்து பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவுற்ற பிறகு கீழ்பவானி பாசனத்தின் நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படும். தொடா்ந்து வாய்க்கால் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு தண்ணீா் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.
பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகே பவானிசாகா் அணையிலிருந்து நீா் திறக்கப்படும். முழுமையாக பணிகள் நிறைவடைந்து தண்ணீா் திறந்தால் தான் புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்புகளின் பாதுகாப்பும், எதிா்காலத்துக்கான நீடித்த பாசன பயன்பாடும் உறுதிப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.