குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
பி.சி.என். கண்டிகை கிராமத்தில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள பி.சி.என். கண்டிகை கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததி காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீா் பைப் லைன்கள் சேதம் அடைந்து, மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் சரிவர செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா், மேட்டு குன்னத்தூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்தை பி. சி. என். கண்டிகை கிராமத்தில் சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி எஸ்.ஐ. குணசேகரன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினாா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு குடிநீா் பிரச்னை சரி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும்
கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.