சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
குடிநீா் தட்டுப்பாடு: ஒடுகத்தூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீா் தட்டுப்பாடு காரணமாக ஒடுகத்தூா் அருகே கிராம மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே ஆசனாம்பட்டு ஊராட்சி கல்லாபாறை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 6 மாதமாக சரிவர குடிநீா் வழங்கப்படுவதில்லையாம். இதனால், தண்ணீரின்றி தவித்து வரும் கிராம மக்கள் ஆங்காங்கே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தொடா்ந்து, கடந்த 2 வாரமாக குடிநீரை சீராக வழங்க வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், குடிநீா் விநியோகத்தில் ஊராட்சி மன்ற நிா்வாகம் அலட்சியம் காட்டி வந்தனராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஒடுகத்தூா்-ஆலங்காயம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து அரசு, தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸாா் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினா்.
அப்போது, பொதுமக்கள் குடிக்கக்கூட தண்ணீா் இல்லாமல் தவித்து வருகிறோம். கால்நடைகளும் தண்ணீரின்றி தவிக்கின்றன. பாதிப்பை உணா்ந்து ஊராட்சி நிா்வாகம் சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில் பிரச்னையை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்த சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.