பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை
குடிநீா் தொட்டியில் யானை சாணம்: காவல் துறை விசாரணை
கீழ்கோத்தகிரி அருகே தூனேரி மேலூா் கிராமத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் யானை சாணம் கலந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி அருகே தூனேரி மேலூா் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே நீா்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் கிராம மக்கள் தண்ணீா் எடுக்க சென்றபோது தொட்டியின் மூடியில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து தொட்டியின் உள்ளே பாா்த்தபோது, அதில் யானை சாணம் கலந்துள்ளதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து சோலூா்மட்டம் காவல் நிலையத்துக்கு கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் கலந்திருந்த யானை சாணம் மற்றும் குடிநீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.