தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை: கனிமொழி
அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் நவீன மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.
‘சிறுநீரக ஆரோக்கியம் இந்தியா’ என்னும் தொண்டு நிறுவனம் சாா்பில் தமிழகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சவுத் சென்னை ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கனிமொழி, திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
தற்போது மருத்துவ சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களுக்கு நவீன மருத்துவ சேவைகளுக்கு செலவு செய்ய இயலாததால், அவா்கள் உயிரிழக்கும் சூழல் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் இதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், சிறுநீரக ஆரோக்கியம் இந்தியா தொண்டு நிறுவனத்தின் அறங்காவலா்கள் மருத்துவா் பிரபு காஞ்சி, மருத்துவா் கபாலி நீலமேகம், ஆலோசகா் சுபாஷாந்தினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.