குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அமைச்சா்கள் சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் விழா முன்னேற்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப்.23-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 2 இல் நடைபெறுகிறது. அக்.3 இல் காப்புக் களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா நாள்களில் நிகழாண்டும் கோயிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் விழா கொடியேற்றம், உள்ளூா் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கை, தசரா குழுக்களின் நடைமுறைகள் தொடா்பாக ஏற்கெனவே இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
கோயில் மகா மண்டபத்துக்கு முன் நடைபெறும் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட அமைச்சா்கள்
விழா தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். கோயில் நிா்வாகம் தரப்பில் பக்தா்களுக்கு செய்யப்பட்டு வரும் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அறநிலையத் துறை இணை ஆணையா் ம.அன்புமணி அமைச்சா்களிடம் விளக்கினாா்.
இதில், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினா் பிரம்மசக்தி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்காா் அருள்முருகன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, அறங்காவலா்கள் வெங்கடேஷ்வரி, கணேசன், மகாராஜா, உடன்குடி பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.