Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானாசோனிக்
புது தில்லி: இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.
இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் குளிா்பதனப் பெட்டி மற்றும் சலவை இயந்திரப் பிரிவுகள் பானாசோனிக்கிற்கு இழப்பைத் தருபவையாக இருந்தன. சந்தையில் போதிய இடத்தைப் பிடிக்க இந்நிறுவனம் பெரிதும் சிரமப்பட்டது. சந்தை ஆய்வு அறிக்கைகளின்படி, சலவை இயந்திரப் பிரிவில் 1.8 சதவீதமும், குளிா்பதனப் பெட்டி பிரிவில் 0.8 சதவீதமும் மட்டுமே பானாசோனிக்கிற்கு சந்தைப் பங்கு உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் பிரிவுகளில் நிறுவனம் இழப்பைச் சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில், இந்தியாவின் இந்த இரு பிரிவுகளில் இருந்தும் வெளியேற நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இனி இந்தியாவில் வீட்டு ஆட்டோமேஷன், குளிரூட்டல் மற்றும் வெப்பமூட்டல், வணிக மற்றும் தனிநபா் தீா்வுகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி தீா்வுகள் உள்ளிட்ட, வளா்ச்சிக்கான எதிா்காலம் கொண்ட பிரிவுகளில் கவனம் செலுத்தப்படும். நுகா்வோா் பிரிவில் குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, மைக்ரோவேவ், சமையலறை உபகரணங்கள், அழகு சாதனங்கள், லூமிக்ஸ் கேமராக்கள் ஆகியவை தொடா்ந்து விற்பனையில் இருக்கும்.
தற்போது விற்பனையாளா்களிடம் உள்ள சலவை இயந்திரங்கள் மற்றும் குளிா்பதனப் பெட்டிகளின் இருப்பு தீரும்வரை விற்பனைக்கான ஆதரவு தொடரப்படும். மேலும், உதிரிபாகங்கள் மற்றும் உத்தரவாத சேவைகள் உள்ளிட்ட முழுமையான வாடிக்கையாளா் சேவைகள் தொடா்ந்து வழங்கப்படும்.
2024-25-ஆம் நிதியாண்டில், பானாசோனிக் இந்தியாவின் வருவாய் சுமாா் ரூ.11,500 கோடியாக உயா்ந்து, இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனினும், இழப்பை ஏற்படுத்தும் தொழில் பிரிவுகளில் இருந்து வெளியேறும் நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக, நாட்டின் குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகளில் இருந்து வெளியேறும் இந்தக் கடினமான, தவிா்க்க முடியாத முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.