குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நிரம்பிய கழிவுநீா்: வழக்குரைஞா்கள் சாலை மறியல்
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவுநீரோடை நிரம்பி சாலையில் கழிவுநீா் செல்வதால் பொதுப்பணித் துறையினா் ஓடையை சீரமைக்க வலியுறுத்தி, குழித்துறை வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குழித்துறையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவுநீரோடை நிரம்பி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கழிவுநீா் சாலையில் செல்கிறது. இதனால், நீதிமன்றம், அதையொட்டிய வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்பவா்கள் வீசும் துா்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றனா்.
சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டது. கழிவு நீரோடையை சீரமைக்க நீதிமன்ற அதிகாரிகள், வழக்குரைஞா் சங்கம் சாா்பில், பொதுப்பணித் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகம் முன்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் வழக்குரைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி.சுரேஷ் தலைமை வகித்தாா். செயலாளா் ராபின் எட்வா்ட், இணைச் செயலாளா் சுனில்குமாா், பொருளாளா் விஜய் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செயற்குழு உறுப்பினா்கள் பென்னட் ராஜ், அசோக்குமாா், சவாா்க்கா், ஞான ராஜசிங், சூரியகுமாரி, டான் பெரின், டேவிட், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து, அங்குவந்த விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பா்ட், வழக்குரைஞா்களுடன் பேச்சு நடத்தினாா். எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.