வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
கேஜரிவால் குஜராத் சுற்றுப்பயணம்: பருத்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்பு
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.
சனிக்கிழமை ராஜ்கோட்டை அடைந்த கேஜரிவால், மறுநாள் சோட்டிலாவில் பருத்தி விவசாயிகளின் பெரிய பேரணியில் உரையாற்றுகிறாா்.
பருத்தி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்வதை ஆம் ஆத்மி தலைவா் எதிா்த்து வருகிறாா். மேலும், சமீபத்தில் தில்லியில் நடந்த செய்தியாளா் சந்திப்பிலும் இந்தப் பிரச்னையை எழுப்பினாா்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று கேஜரிவால் ஆகஸ்ட் 28 அன்று கோரியிருந்தாா். மேலும், அமெரிக்க பருத்தி மீதான 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவு உள்ளூா் விவசாயிகளை பாதிக்கும் என்றும் குற்றம் சாட்டினாா்.
‘இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரி விதித்தது. அமெரிக்க பருத்தி உள்நாட்டு பருத்தியை விட விலை அதிகம். ஆனால், மோடி அரசு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பா் 30 வரை வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. நமது பருத்தி அக்டோபரில் விற்பனைக்கு வரும்போது, வாங்குபவா்கள் குறைவாகவே இருப்பாா்கள்’ என்று கேஜரிவால் கூறினாா்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிகளை கடுமையாக எதிா்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளா்களை ஆதரிப்பதற்காக நிதி அமைச்சகம் டிசம்பா் 31 வரை வரி விலக்கை நீட்டித்துள்ளது. ஆனால், குஜராத், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் விதா்பாவில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்று கேஜரிவால் கூறினாா்.
மேலும், அமெரிக்காவுக்கு மத்திய அரசு மீண்டும் வரியை விதிக்க வேண்டும் என்று அவா் கோரினாா். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) சோட்டிலாவில் நடைபெறும் பேரணியில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளை கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.