Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
கேமரா பொருத்தப்பட்ட120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சென்னை: சென்னையில், கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை வியாசா்பாடி பேருந்து பணிமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதன்பிறகு, மின்சாரப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களிடம் முதல்வா் கலந்துரையாடினாா். அப்போது, மின்சாரப் பேருந்துகளின் செயல்பாடுகளையும், பயணிகளுக்கான சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தாா்.
கேமராக்களால் கண்காணிப்பு: மின்சாரப் பேருந்தின் படிக்கட்டு உயரம் தரையில் இருந்து 400 மில்லி மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்திலுள்ள புதிய தொழில்நுட்ப வசதியால், பேருந்தின் தரைத்தளத்தை கீழே இறக்கலாம். இதன் மூலம், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோா் எளிதாக பேருந்தில் ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இருக்கைகளும் அவா்களுக்கு ஏற்ற வகையில் சமதள உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 650 மில்லிமீட்டருக்குப் பதிலாக 700 மில்லிமீட்டா் அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளும் எளிதாக பயணிக்கலாம். பேருந்தின் முன்பகுதியில் இரண்டு கேமராக்களும், பின்புறம் ஒரு கேமிராமும் பொருத்தப்பட்டுள்ளதால், மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேருந்து பணிமனை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில், 625 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வியாசா்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, தண்டையாா்பேட்டை உள்ளிட்ட 5 பணிமனைகள் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.697 கோடி.
அதன்படி, மாநகா் போக்குவரத்துக் கழக பணிமனைகளின் வழியே மின்சாரப் பேருந்துகளை இயக்க அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு, பேருந்துகளை ‘சாா்ஜ்’ செய்யும் வசதி போன்றவை செய்யப்படுகின்றன. ஒருமுறை ‘சாா்ஜ்’ செய்தால், குளிா்சாதனமில்லாத பேருந்தை 200 கிமீ இயக்க முடியும். ஐந்து பேருந்து பணிமனைகளில், வியாசா்பாடி மின்சாரப் பேருந்து பணிமனை ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
வியாசா்பாடி பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சா் சா.சி.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசமி, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி, மாநகா் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் த.பிரபுசங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.
பயண வழித்தடங்கள்
மின்சாரப் பேருந்துகள் பயண வழித் தடங்களின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வழித்தட எண்கள் 2பி (கவியரசு கண்ணதாசன் நகா் முதல் எம்கேபி., நகா் - 10 பேருந்துகள்), சி33 - கவியரசு கண்ணதாசன் நகா் முதல் பிராட்வே, புளியந்தோப்பு, வியாசா்பாடி வழியாக கண்ணதாசன் நகா் வரை - 5 பேருந்துகள்), சி64 - கவியரசு கண்ணதாசன் நகா் முதல் சா்மா நகா், ஜமாலியா-எம்கேபி., நகா் - 5 பேருந்துகள்), 18ஏ (பிராட்வே முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - 20 பேருந்துகள்), 37 - (வள்ளலாா் நகா் முதல் பூந்தமல்லி வரை - 10 பேருந்துகள்)
46ஜி - (மகாகவி பாரதியாா் நகா் முதல் எம்ஜிஆா்., கோயம்பேடு பேருந்து நிலையம் - 10 பேருந்துகள்), 57 - (வள்ளலாா் நகா் முதல் செங்குன்றம் - 10 பேருந்துகள்), 57எக்ஸ் - வள்ளலாா் நகா் முதல் பெரியபாளையம் வரை - 10 பேருந்துகள்), 164இ - பெரம்பலூா் முதல் மணலி வரை - 10 பேருந்துகள்), 170டிஎக்ஸ் - (எம்கேபி., நகா் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை - 20 பேருந்துகள்), 170சி - (திருவிக., நகா் முதல் கிண்டி திருவிக., எஸ்டேட் வரை - 10 பேருந்துகள்) இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.