கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளையம் பிரிவு சாலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் நெடுஞ்செழியன் மற்றும் துவரங்குறிச்சியைச் சோ்ந்த ஆண்டியப்பன் மகன் அழகன் ஆகியோா் தனித்தனியே நுடவைத்தியசாலைகளை வைத்து நடத்தி வருகின்றனா்.
இருவருக்கும் தொழிலில் போட்டி இருந்து வந்துள்ளதாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்செழியன், தனது நுடவைத்திய சாலையில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியைக் கொண்டு அழகனை பொதுவெளியில் வைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து நெடுஞ்செழியனைக் கைது செய்தனா். அழகன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்துள்ள துவரங்குறிச்சி போலீஸாா், நெடுஞ்செழியனை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.