கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 41 பெண்கள் உள்பட 161 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், திண்டிவனத்தில் இருந்து நகரி ரயில் பாதை திட்டங்களுக்காக நிலம், வீடு, கடைகள், மரங்கள் மற்றும் மாந்தோப்புகள் ஆகியவைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க காலதாமதம் செய்து வருகின்றனா்.
இது தொடா்பாக ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் இழப்பீடு தொகைக்கான ஆவணங்கள் சமா்ப்பித்தும் பணம் வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறையினா் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே நடத்தியதால் போலீஸாா் அனுமதி மறுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் ஆா்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லையா எனக் கூறி காவல் துறையிடம் விவசாய சங்கத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். . இதையும் மீறி 41 பெண்கள் உள்பட 161 பேரை கைது செய்து பேருந்து மூலம் தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா்.