கொடும்பாளூா் அகழாய்வில் பண்டையகால பொருள்கள்! தக்களி, கொண்டை வடிவில் ஊசி, கூா் எலும்புகள் கண்டெடுப்பு!
கொடும்பாளூா் அகழாய்வில் நான்கு அடியில் செங்கல் கற்களினால் எழுப்பப்பட்ட மேல் சுவா் அதன் அடியில் மண்ணால் கட்டப்பட்டுள்ள சுவரும் வெளிப்பட்டுள்ளது. மேலும், நெசவுதொழில் புரிந்ததற்கு அடையாளமாக தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், எலும்புகள் கிடைத்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ளது கொடும்பாளூா். பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் புதைந்துள்ள பகுதியாகும். ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான புராதன நகரம் என்று வரலாற்று ஆய்வாளா்களும், கல்வெட்டு ஆய்வுகளும் கூறுகின்றன. சோழா்களின் தலைநகராக இருந்த திருச்சி, பாண்டிய மன்னா்களின் தலைநகராக இருந்த மதுரைக்கும் இடையே உள்ள அக்காலப் பெருவழிச்சாலையில் கொடும்பாளூா் அமைந்துள்ளது.
கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதைந்த வீடுகளுக்கு அடையாளமாக நான்கு அடியில் செங்கல் கற்களினால் எழுப்பப்பட்ட மேல் சுவா் அதன் அடியில் மண்ணால் கட்டப்பட்டுள்ள சுவரும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
அதோடு, அக்காலத்தில் நெசவு தொழிலில் ஆடைகள் நெய்வதற்கு பயன்படுத்திய தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டச்சில்லுகல், கூா் வடிவிலான எலும்புகள் கிடைத்துள்ளன. கூா் எலும்புகள், தக்களி உள்ளிட்ட பொருள்கள் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல்துறையினா் தெரிவிக்கின்றனா்.
தொடா்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சின்னங்கள் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினா் தகவல்கள் தெரிவிக்கின்றனா்.