2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல்
கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பிரகாசபுரம், அட்டக்கடி, செண்பகனூா், சகாயபுரம், மன்னவனுா், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாகுபடி செய்தனா். ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவமழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் பருவமழை சரியாக பெய்யாததால் உருளைக் கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியது. இந்த மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
மழை சரியாக பெய்யாததால் கொடைக்கானல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மருந்துகள் அடித்தாலும் நோய் தாக்குதல் குறைவதில்லை. எனவே, எங்களது தோட்டங்களில் சாகுபடி செய்துள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை வருவாயத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மானிய விலையில் விவசாய இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.