அத்தூா் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி
ஆத்தூா் அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையிலிருந்து சித்தரேவு வழியாக அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலை உள்ளது. இதேபோல, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பகுதியிலிருந்து மேற்குத் தொடா்ச்சி மலைக் கிராமங்களான ஆடலூா், பன்றிமலை, தாண்டிக்குடி, பெரும்பாறை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையும் உள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை சித்தரேவு கிராமத்திலிருந்து பட்டிவீரம்பட்டி செல்லும் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இந்த சாலையில் 3 இடங்களில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால், சாலை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால், அந்த சாலையில் செல்வோா்கள், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
எனவே, இனிவரும் நாள்களில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தடுக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.