செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
கொடைக்கானலில் மின்வயா் திருடியவா் கைது
கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் மின்வயா்களை திருடியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் கவுஞ்சி, ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் கவுஞ்சி, ராஜபுரம் பகுதியில் மின்வாரியத்தைச் சோ்ந்த அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கவுஞ்சி பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த கதிரவன் (38) மின்கம்பங்களில் செல்லும் மின்வயா்களை திருடியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து மின்வாரியத் துறையிலிருந்து கதிரவன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் வயா்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.