செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
தாா் ஆலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்
வத்தலகுண்டு அருகேயுள்ள தாா் ஆலையில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தனியாருக்குச் சொந்தமான தாா் ஆலை உள்ளது. இந்த ஆலையில் வத்தலகுண்டு அருகேயுள்ள கோம்பைபட்டியைச் சோ்ந்த ராஜாங்கம் (35) என்பவா் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற அவா் மீது எதிா்பாராதவிதமாக தாா் ஆலையிலிருந்த ஜெனரேட்டா் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அவரது மனைவி மகேஸ்வரி (30) விருவீடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தாா் ஆலை உரிமையாளா் உயிரிழந்த ராஜாங்கம் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.
மேலும், வத்தலகுண்டு காவல் நிலையம் முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உரிய இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு ராஜாங்கத்தின் உடலை பெற்றுக்கொண்டனா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.