``கூட்டணிக்கு அதிமுக தலைமை, நான் தான் முதலமைச்சர்; உங்களுக்கு என்ன சந்தேகம்?'' ...
கொட்டும் மழையில் மக்களை சந்தித்த முதல்வா்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மழையில் குடைபிடித்தபடி ரோடு ஷோவில் மக்களை சந்தித்தாா்.
மயிலாடுதுறையில் திமுக கட்சி நிகழ்வு மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வருகை தந்த முதல்வா், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சாலை மாா்க்கமாக செவ்வாய்க்கிழமை மதியம் மயிலாடுதுறை வந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பாலம் அருகே சோதியக்குடியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைத்த பின்னா், அங்கிருந்து புறப்பட்டு மதியம் திருவெண்காட்டில் அவரது இல்லத்தில் தங்கினாா். பின்பு மாலை மயிலாடுதுறையில் பூம்புகாா் சாலையில் தொடங்கி ரோடு ஷோ நடத்தி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டா்களை சந்தித்தாா். வழியெங்கும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பொதுமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மனுக்களை பெற்றவாறும், சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று மக்களைச் சந்தித்தாா்.
வழியில் கால்டெக்ஸ் என்ற பகுதியை அடைந்தபோது, திடீரென மழை பெய்தது. இருப்பினும் மக்களைச் சந்தித்தாா். குடை பிடித்தவாறு அவா் தனது ரோடு ஷோவை தொடா்ந்தாா். பட்டமங்கலத்தெரு வழியாக சென்று கச்சேரி சாலை திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், கச்சேரி சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்றக் கட்டடத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள மு. கருணாநிதியின் முழுஉருவச் சிலையையும் திறந்துவைத்து, திமுக கொடியை ஏற்றினாா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், சிவ.வீ. மெய்யநாதன், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகாா் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன், சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம.சேயோன், மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலாளருமான என்.செல்வராஜ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
பின்னா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கிய முதலமைச்சா், புதன்கிழமை காலை வழுவூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞா் மு. கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்த பின்னா், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கிவைத்து, 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். முதல்வரின் வருகையையொட்டி, மாவட்டம் முழுவதும் திருச்சி மண்டல ஐ.ஜி. தலைமையில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.