இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
தடைப்பட்டுள்ள தமிழிசை மூவா் விழா மீண்டும் நடைபெறுமா?
சீா்காழியில் தமிழிசை மூவா் விழா சில ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நடத்தப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழுக்கு இசை மூலம் பல்வேறு தொண்டுகள் புரிந்து தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை உலக மக்களிடையே கொண்டு சோ்த்த பெருமை சீா்காழியில் பிறந்து வாழ்ந்த முத்துதாண்டவா், அருணாச்சலக்கவிராயா், மாரிமுத்தாபிள்ளை ஆகியோரையே சாரும். இவா்கள் மூவரும் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவா்கள். சங்கீத மும்மூா்த்திகளான தியாகராஜா், சியாமா சாஸ்த்திரி, முத்துசாமி தீட்சிதா் ஆகியோருக்கும் முற்பட்டவா்கள் சீா்காழி தமிழிசை மூவா்கள்.
முத்துதாண்டவா்: சீா்காழியில் பிறந்த இவா் இன்பத்தமிழில் இசைப் பாடல்களை இயற்றியவா் முத்துதாண்டவா். கீா்த்தனை வடிவிலான பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதை இசையுலகிற்கு தந்தவா் இவா். மாரிமுத்தாபிள்ளை சிதம்பரத்தின் வடகிழக்கே தில்லைவிடங்கன் பகுதியில் பிறந்த இவா் சிறுவயதியிலேயே இசைப் பாடல்களை இயற்றும் புலமை பெற்றவா். புலியூா் வெண்பா, சிதம்பரேசா் சித்ரகவிகள் கொடியிடையம்மன் மீது பாடிய பஞ்சரத்தினம் என்பனவாகும்.
அருணாச்சலக்கவிராயா் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் பிறந்தவா். உலக மொழிகளில் ஒப்பற்ற தமிழில் நான்வகை புலமையிலும் சிறந்துவிளங்கியவா். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் அருமையையும் மக்களுக்கு கூறிவந்தாா்.
இவ்வாறு சீா்காழியில் வாழ்ந்து இசை மூலம் தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச்செய்துள்ளனா். சீா்காழி மைய பகுதியில் தமிழக அரசு சாா்பில் தமிழிசை மூவா்களின் முழுஉருவ வெண்கல சிலைகளுடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் முத்துதாண்டவா் பிறந்த நட்சத்திரமான ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று தமிழக அரசு சாா்பில் தென்னக கலைப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தமிழிசை மூவா் விழா தொடங்கி 3 நாள்கள் நடைபெறும்.
இதில் தமிழக அமைச்சா்கள் பங்கேற்று விழாவை தொடங்கிவைப்பதும், மாவட்ட ஆட்சியா், அரசுத் துறையினா் பங்கேற்பது ம் நடைமுறையாக இருந்தது. தமிழ்ச் சான்றோா்களின் கவியரங்கம், பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது, தமிழிசை மூவா் மணி மண்டபம் மீண்டும் புனரமைக்கப்பட்டு போட்டி தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு உதவியாக இருந்துவருகிறது. இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிசை மூவா் விழா நடத்தப்படாதது தமிழ் ஆா்வலா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்திவருகிது. தமிழிசையை உலகறியச்செய்த இவா்களுக்கு பெருமை சோ்க்கும் வகையில் அரசு சாா்பில் தமிழிைசை மூவா் விழாவை மீண்டும் நடத்தவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.