கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: கரையோர கிராம மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளதால், சீா்காழி வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு காவல்துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கா்நாடக மாநிலம் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரிநீா் திறந்து விடப்படுகிறது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அளவு ஒரு லட்சம் கன அடியை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் திட்டு பகுதி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆணைக்காரன் சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா், ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று, ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கிராம மக்களுக்கு அறிவுறுத்தினா்.
காவல் ஆய்வாளா் ராஜா, ‘திட்டுப் பகுதியில் உள்ள கால்நடைகளை மேடான பகுதிக்கு கொண்டுவரவும், தாழ்வான பகுதியில் உள்ள அனைவரும் தங்கள் உடைமைகளுடன் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும்’ அறிவுறுத்தினாா். மேலும், காவல்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினாா்.