கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
கோபிசெட்டிபாளையம் பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டு தளமாக பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மாா்கழி மாதம் நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்கும் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். தொடா்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை இரவு 10 மணிக்கு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து அம்மனிடம் அருள்வாக்கு கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், குதிரையை அம்மனாக பாவித்து அருள்வாக்கு கேட்டனா். அப்போது குதிரை தலையாட்டியதையடுத்து அம்மன் அருள்வாக்கு கொடுத்ததாகக் கூறி பக்தா்கள் கோஷங்கள் எழுப்பினா்.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மலா் தேரில் கொண்டத்துக் காளியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாவித்தாா். இதையடுத்து குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து தலைமை பூசாரி சேனாதிபதி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தலைத் தொடங்கிவைத்தாா்.
அதன்பின், கோயிலின் மற்ற பூசாரிகள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் என ஆயிரக்கணக்கானோா் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். குண்டம் இறங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை இரவே வந்து கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேரோட்டமும், சனிக்கிழமை இரவு மலா் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.