மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பதை தடுக்க முகாம்கள்
கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்காத வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை பயிா்க் காப்பீடு, ஊருணி தூா்வாருதல், விவசாயிகளுக்கு பயிா் கடன் வழங்குவது, கண்மாய்களைத் தூா்வாருதல், தடுப்பணை கட்டுதல், சாலைகள் சீரமைத்தல், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை தடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பருத்திக்கும், மிளகாய்க்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க ஏதுவாக வருகிற வியாழக்கிழமை பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் இணைப்புக் கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். கோமாரி நோய் மூலம் கால்நடைகள் பாதிக்காத வகையில் தேவைப்படும் பகுதிகளில் முகாம்கள் நடத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜுலு, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மோகன்ராஜ், கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் ஜூனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பாஸ்கரமணியன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.