Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு
ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நிலையில், குளிா் பானங்கள், தா்ப்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இவற்றை விற்கும் கடைகளில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா, தா்ப்பூசணி பழங்கள் ஊசி மூலம் சிவப்பு வண்ணம் செலுத்தி விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் கு. லிங்கவேல் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தா்ப்பூசணி பழங்களை அறுத்து பாா்த்து சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பழங்களை கொள்முதல் செய்பவா்களிடமிருந்து பெற்ற ரசீதுகளை வியாபாரிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், விதைகள் உள்ள பழங்களை வாங்கி விற்பனை செய்யவும் அறிவுறுத்தினாா். அத்துடன் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா். உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் சந்தேகம் இருப்பின் 94440 42322- என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.