கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 2,98,400 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சாா்பில், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், 6-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை முதல் 2025 ஜன. 20 வரை 36 நாள்கள் நடைபெற உள்ளது. மோகனூா் வட்டம், அணியாபுரம்புதூா் கிராமத்தில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில், மாவட்டத்தில் 2,43,708 பசு இனங்கள், 54,692 எருமை இனங்கள் என மொத்தம் 2,98,400 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கொண்ட 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.33 லட்சம் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி, ஜூன் 5-ஆவது சுற்றில் 2.98 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, நவம்பரில் 2.97 லட்சம் ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.
கோமாரி நோயானது இரட்டைக் குளம்பின கால்நடைகளைத் தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், உமிழ்நீா் மற்றும் பண்ணைக் கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் கால்நடை வளா்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயைத் தடுக்கும் பொருட்டு கோமாரி நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மூன்று மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை ஜன. 20 வரை அந்தந்த கிராமங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஈ.மாரியப்பன், கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.