வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!...
கோம்பையில் மாட்டுவண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
கோம்பை குடியிருப்பிலிருந்து உத்தமபாளையம், உ. அம்மாபட்டி விலக்கு வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நடுமாடு, கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான் என 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 60 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இதில், தேவாரம், கோம்பை, உப்புக்கோட்டை என பல்வேறு பகுதிகளிலிருந்து போட்டியாளா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போட்டி திடீரென கோம்பைக்கு மாற்றப்பட்டது. இதனால், விழாக் குழுவினா் தேவையான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. கோம்பை - உத்தமபாளையம் இடையே போக்குவரத்துக்கு இடையூறாக போட்டிகள் நடைபெற்றன.
அதோடு, மாட்டிவண்டிக்குப் பின்னால், ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அதிக சப்தத்துடன் ஒலியெழுப்பி மாடுகளை வேகமாக ஓடச் செய்தனா். இதனால், பல மாடுகள் சாலையை விட்டு கீழே இறங்கி ஓடியதால் அவை காயமடைந்தன. இந்தப் போட்டிகளில் விதிமீறல்கள் இருந்ததாக மாட்டின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, நெடுஞ்சாலையில் நடத்தப்படும் இது போன்ற மாட்டுவண்டி பந்தயத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.