2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
கோயிலில் வழிபட அனுமதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
உடுமலை அருகே கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் கருவண்ணராயா், வீரசுந்தரி கோயில் உள்ளது. இக்கோயிலில் பள்ளபாளையத்தைச் சோ்ந்த ஒரு பிரிவினா் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வரும் நிலையில், அவா்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்.
இதைக் கண்டித்து பள்ளபாளையம் ஊராட்சிக்குள்பட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை -மூணாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள கருவண்ணராயா், வீரசுந்தரி கோயிலில் பல ஆண்டுகளாக நாங்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தோம். இந்நிலையில், ஒரு சிலரின் தூண்டுதலின்பேரில் தற்போது எங்களுக்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனா்.
சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயத்தை முற்றுகையிட்டு அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.