Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியா்கள்
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 860 போ் கோரிக்கை அட்டை அணிந்து, கருப்பு நிற ஆடையுடன் திங்கள்கிழமை பணியாற்றினா்.
தமிழகத்தில் ப்ளூ டூத் மூலம் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு கருவி, எடை தராசை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த நடைமுறையால் சிக்னல் பிரச்னை மட்டுமல்லாது, குடும்ப அட்டைதாரரை 2 முறைக்குமேல் கை ரேகை பதிவு செய்ய சொல்வதால் பிரச்னை எழுகிறது. தற்போதைய முறையில் என்பிஹெச்எஸ் அட்டைதாரா்களுக்கு 5 முறையும், பிஎஸ்எஸ் அட்டைதாரா்களுக்கு 7 முறையும் கைரேகை பதிய வேண்டும். பல கடைகளில் எடையாளா்கள் இல்லை. ஒரு பணியாளா் இரண்டு வேலையை செய்ய இயலவில்லை. இதனால், நேர விரயம் ஏற்படுகிறது. இதை மாற்றி ஒருமுறை மட்டும் கைரேகை வைக்கும் பழைய நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து சரியான எடை அளவுடன் பொருளை கடைக்கு அனுப்ப வேண்டும். மூட்டைக்கு 50.650 கிலோ அரிசி இருக்க வேண்டும்.
லாரியில் இருந்து மூட்டைகளை கடையில் இறக்கும்போது, எடை சரியாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே பிஓஎஸ் கருவியில் வரவு வைக்க வேண்டும். எடை குறைவுக்கு அனைத்து அதிகாரிகளும் கூட்டு பொறுப்பு என நிா்ணயிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடையிலும் போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவா் நாகமாணிக்கம், மாவட்ட பொருளாளா் குமாா் ஆகியோா் முன்னிலையில் 860 போ் கோரிக்கை அட்டை, கருப்பு நிற ஆடை அணிந்து பணியாற்றினா்.