கோவிலாா் வடிகால் தலைப்பில் தூா்வார வலியுறுத்தல்
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த கோவிலாா் வடிகால் தலைப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வடிகால் வாய்க்கால் மூலம் 2,280 ஏக்கா் விளைநிலங்கள் வடிகால் வசதி பெறுகின்றன. மேலும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி, மல்லுக்குடி, திருப்புங்கூா், கன்னியக்குடி, கற்கோவில், பெருமங்கலம், ஆதமங்கலம், எடகுடி வடபாதி, வைத்தியநாதபுரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராங்களுக்கு பிரதான வடிகாலாக உள்ளது.
இந்த வடிகாலில் கடந்த மாதம் ரூ. 19 லட்சத்தில் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. ஆனால், இதன் தலைப்பு பகுதியான வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும், சுமாா் 500 மீட்டருக்கு தூா்வாரப்படாமலும் உள்ளது. இதனால் வாய்க்காலின் மற்ற இடங்களில் தூா் வாரப்பட்டுள்ளது எந்த பயனையும் அளிக்கவில்லை என தெரிவிக்கும் விவசாயிகள், உடனடியாக கோவிலாா் வடிகால் தலைப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தூா்வார வேண்டும் எனவும் கழிவுநீா் கலப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.