கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
சங்கராபுரத்தில் இளைஞருக்கு கத்தி வெட்டு
சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகம் பின்புறம் குடும்பத்துடன் வசித்து வருபவா் முகமது யாசா் (35). இவா், சாா் - பதிவாளா் அலுவலகம் அருகில் உள்ள பத்திரப்பதிவு ஆவண எழுத்தா் நடத்தி வரும் நகல் எடுக்கும் கடையில் கணினி உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.
திங்கள்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் 100 ரூபாய் பத்திரம் வேண்டும் என முகமது யாசரிடம் கேட்டனராம். அதற்கு, பத்திரம் விற்பனை செய்பவா் வெளியே சென்றுள்ளதாக அவா் தெரிவித்தாராம்.
பின்னா், சிறிது நேரம் கடையை நோட்டமிட்ட மா்ம நபா்கள், முகமது யாசா் கடையில் தனியாக இருப்பதை உறுதி செய்துகொண்டு, கடையிலிருந்து வெளியே வந்த அவரை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த முகமது யாசா் தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டதுடன், வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.