சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு -உச்ச நீதிமன்றம்
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடா்பாக மத்திய அரசு, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது, இயற்கைப் பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக மேகவெடிப்புகளால் பலத்த மழை கொட்டித் தீா்த்து, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் நேரிட்டு வருகின்றன. இதனால் உயிா்ச்சேதங்களும், பெரும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த மாநிலங்களில் நிலச்சரிவுகள் மற்றும் பெருவெள்ளத்துக்கான காரணங்கள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்துவதோடு, இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘மத்திய, மாநில அரசுகளுக்கென தனித்தனியே பேரிடா் மேலாண்மை ஆணையங்கள் இருந்தபோதிலும், இயற்கைப் பேரிடா்களைத் தடுக்கவோ, தாக்கத்தைக் குறைக்கவோ எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை. இமயமலைப் பகுதியில் சூழலியல் மற்றும் ஆறுகளைப் பாதுகாப்பதில் சுற்றுச்சூழல், நீா்வளத் துறை அமைச்சகங்கள் தோல்வியடைந்துவிட்டன.
தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் அனைத்து சாலைத் திட்டங்கள் தொடா்பாக நிலவியல் அல்லது புவி-தொழில்நுட்பம் அல்லது சூழலியல் ஆய்வை மேற்கொள்வதற்கு சுதந்திரமான நிபுணா் குழுவை அமைக்க வேண்டும்; பெரிய ஆறுகள், சிற்றாறுகள், பிற நீா்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால-நிவாரண உதவிகள் மற்றும் முதலுதவி சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.
வளா்ச்சி-சுற்றுச்சூழல் சமநிலை அவசியம்: இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். மழை-வெள்ளத்தில் ஏராளமான மரக்கட்டைகளும் அடித்து வரப்பட்டதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது, தீவிரமான விவகாரம்.
பஞ்சாப் வெள்ளம் தொடா்புடைய புகைப்படங்களைப் பாா்த்ததில், ஒட்டுமொத்த விளைநிலங்களும் பயிா்களும் நீரில் மூழ்கியிருப்பது தெரியவருகிறது. வளா்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலை வேண்டும் என்பதை இது உணா்த்துகிறது.
இந்த விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலைத் துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
வெள்ளத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு, மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.