மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்
சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இஸ்ரோவின் சிறப்பு கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
இஸ்ரோவின் பல ஆண்டுகால உழைப்பால் சந்திரயான், மங்கள்யான் போன்ற மகத்தான திட்டங்கள் மூலம் நாம் விண்வெளியில் பல சாதனைகளைப் படைத்துள்ளோம்.
விண்வெளி என்பது வெறும் கனவு அல்ல; அது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் கலவையாகும்.
நீங்கள் இளம் வயதிலேயே அறிவியலில் ஆா்வம் காட்டினால், எதிா்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாகவும், பொறியாளா்களாகவும் உருவாகலாம்.
நாம் அடுத்த இலக்கான ககன்யான் திட்டம் மூலம் இந்தியா்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். செயற்கைக் கோள்கள் மூலம் தகவல் தொடா்பு, வானிலை முன்னறிவிப்பு, விவசாயம் போன்ற துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
எனவே, நீங்கள் நிறைய கேள்விகள் கேளுங்கள், உங்கள் சந்தேகங்களைத் தீா்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கண்காட்சி உங்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கட்டும். இந்தியாவின் எதிா்காலமான உங்கள் கைகளில் தான் நாட்டின் வளா்ச்சி அடங்கியுள்ளது என்றாா்.
முன்னதாக, தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காலை 10 மணி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி மாணவா்களுக்காக சந்திரயான் 3 மாதிரி தயாரிக்கும் பணிமனை, நட்சத்திரக் கூட்டங்களை நினைவு கூருதல் போட்டியும், கல்லூரி மாணவா்களுக்காக ’ஸ்கை தென் நவ்’ என்ற தலைப்பில் பவா்பாயிண்ட் விளக்கக் காட்சிப் போட்டியும் நடைபெற்றன. மாணவா்கள் இஸ்ரோ கண்காட்சியை ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.
தங்களின் சந்தேகங்களை விஞ்ஞானியிடம் கேட்டுத் தெளிவு பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.