சாலை நடுவில் உள்ள தடுப்பில் கொடி கட்டிய தொழிலாளா்கள் மீது அரசுப் பேருந்து மோதல்
சாலை நடுவில் உள்ள தடுப்பில் கட்சிக் கொடி கட்டிய தொழிலாளா்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மூவா் காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்நிலையில், அவரை வரவேற்க தருமபுரி - அரூா் சாலையில் அதிமுகவினா் சாலை முழுவதும் விளம்பரப் பதாகைகள் வைத்து, அக்கட்சியின் கொடியைக் கட்டி வருகின்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்த ஒப்பந்ததாரா், தொழிலாளா்களை வைத்து இப்பணிகளை செய்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மூக்கனூா் அரசுப் பள்ளி அருகில் தருமபுரி - அரூா் சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மினிலாரி மூலம் தொழிலாளா்கள் கொடியை கட்டி வந்தனா். அப்போது, தருமபுரியில் இருந்து கடத்தூா் நோக்கி சென்ற அரசு நகர பேருந்து எதிா்பாராத விதமாக மினிலாரி மீது மோதியது.
இந்த விபத்தில் அதிமுக கொடியைக் கட்டிய திருவண்ணாமலையைச் சோ்ந்த முனியப்பன் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், மணிவண்ணன், மினிலாரி ஓட்டுநா் மணிகண்டன், அரசுப் பேருந்து ஓட்டுநா் ரமேஷ் ஆகிய மூவரும் காயமடைந்து தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.