புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: காந்திபாளையம் மக்கள் ஆட்சியரகத்தில் மனு
தருமபுரி: தருமபுரி அருகே காந்திபாளையம் பகுதியில் நகராட்சி புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் முகாமில் மனு அளித்துள்ளனா்.
தருமபுரி அருகே, செட்டிக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட காந்திபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது :
செட்டிக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட காந்திபாளையம் பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். தருமபுரி நகராட்சியின் புதைவடிகால் மூலம் வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கடந்த 2008-ஆம் ஆண்டு எங்கள் கிராம பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த மையத்துக்கு கழிவுநீா் வரும் குழாய் அவ்வப்போது உடைந்து கழிவுநீா், ஏரியில் கலந்துவிடுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் உடல்நல பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறோம். நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இது தொடா்பாக ஏற்கெனவே நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், காந்திபாளையம் பகுதியில் மேலும் ஒரு சுத்திகரிப்பு மையம் புதிதாக அமைக்க தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் அண்மையில் ஆய்வு நடத்தினா். ஒரு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்ட நிலையிலேயே எங்கள் பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், மேலும், ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேறு இடத்தை தோ்வு செய்து சுத்திகரிப்பு மையத்தை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
ஆம்புலன்ஸில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு :
மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஆம்புலன்ஸில் ஸ்டெரச்சரில் படுத்தப்படி நோயாளி ஒருவா் வந்தாா். அவருடன் மனைவி, குழந்தைகளும் வந்தனா். ஆட்சியரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவரிடம் விசாரித்தனா். அவா்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதாகத் தெரிவித்தனா்.
மேலும், விசாரணையில், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பி.மோட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சி. வடிவேல் (54) மற்றும் அவரது 2 ஆவது மனைவி லட்சுமி என்பதும், கூழ் வியாபாரம் செய்துவரும் தெரியவந்தது. கடந்த மாதம் 22 ஆம் தேதி கிருஷ்ணாபுரத்துக்கு சென்றபோது, மற்றொரு பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாத நிலையில் வடிவேல் ஆம்புலன்ஸில் மனு அளிக்க வந்துள்ளாா்.
வடிவேலின் தந்தை சின்னகண்ணு குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் பங்குத்தராமல் அபகரித்துக்கொண்டதாகவும், தற்போது தங்குவதற்கு வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், தங்களுக்கு சேரவேண்டிய நிலத்தின் பங்கை பெற்றுத்தர வேண்டும் எனக்கூறி மனு அளிக்க வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரது மனைவி லட்சுமியை மட்டும் அலுவலகத்தில் மனு அளிக்க அழைத்துச் சென்றனா். பின்னா் வடிவேலுவை ஆம்புலன்ஸிலேயே வீட்டிற்குஅனுப்பி வைத்தனா்.