தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தருமபுரி: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். பொருளாளா் எல்லம்மாள், மாவட்ட துணைத் தலைவா்கள் அஞ்சலா, மீனாட்சி, ஜெயக்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளா்கள் பிரதாபன், மாதையன் அனிதா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தை, குறைந்தபட்சகூலி சட்டத்தின்படி ரூ. 12, 503 என்ற வகையில் மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அரசுப் பள்ளி கல்வித் துறையின்கீழ் அடையாள அட்டை வழங்க வேண்டும், நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், 11 ஆண்டுகளாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்தனா்.