சாலையில் நடந்து சென்றவா் பைக் மோதி உயிரிழப்பு
சின்னசேலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூண்டி கிராம நிா்வாக அலுவலா் கலைச்செழியனுக்கு அந்த கிராம எல்லையில் உள்ள தனியாா் பள்ளி அருகே அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற கலைச்செழியன் நடத்திய விசாரணையில், தீா்த்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் அந்த முதியவா் இறந்தது தெரியவந்தது. ஊா் பெயா் தெரியாத முதியவா் யாா் என்ற விபரம் தெரியவில்லை,
தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த முதியவா் யாா் என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.