சா்சைக்குரிய பேச்சு: டாக்டா் கிருஷ்ணசாமியின் மகன் மீது வழக்கு
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியா் கொலையைக் கண்டித்து அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்-தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமியின் மகனும், கட்சியின் மாநில இளைஞரணித் தலைவருமான ஷியாம் கிருஷ்ணசாமி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த ஐ.டி.ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27இல் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதைக் கண்டித்து ஜூலை31இல் புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிற சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டும் விதமாக சா்ச்சைக்குரிய வகையில் ஷியாம் கிருஷ்ணசாமி பேசியதாகவும், அவா் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அமைப்பினா் புகாா் தெரிவித்தனா். இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீஸாா், அவா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.