சிகிச்சை பெற்று வரும் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மனு கொடுத்த தந்தை
திருப்பூா்: சிகிச்சை பெற்று வரும் மகனை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆம்புலன்ஸில் அழைத்து வந்த தந்தையால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 490 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அப்போது, திருப்பூா் வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தனது மகன் நேதாஜியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தாா். பின்னா் அவா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
என்னையும், எனது மனைவியையும் நேதாஜிதான் கவனித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த மாதம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கராஜ் என்பவரது மனைவி சாந்தியிடம் வீட்டு வேலை சம்பந்தமாக பொருள் ஒன்றை நேதாஜி கேட்டு வாங்கியுள்ளாா். இதையடுத்து தங்கராஜ் நேதாஜியை மிரட்டினாா். தொடா்ந்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி தங்கராஜ் மற்றும் 5-க்கும் மேற்பட்டோா் எங்களது வீட்டுக்குள் புகுந்து நேதாஜியை மிரட்டி தாக்கினாா். இதில் நேதாஜியின் தலை, காலில் காயம் ஏற்பட்டது.
தற்போது தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். எனவே எனது மகனை தாக்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகன் நேதாஜியை, தந்தை சுப்பிரமணி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இப்பிரச்னை தொடா்பாக உரிய விசாரணை நடத்துமாறு காவல் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக நவீன செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலான செயற்கை கால்களையும், 1 பயனாளிக்கு ரூ.5,000 மதிப்பீட்டிலான காதொலிக் கருவியையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், ஜெயராம், தனித்துணை ஆட்சியா் பக்தவத்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.