டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
சின்னசேலம் அருகே போலி மருத்துவா்கள் இருவா் கைது
சின்னசேலம் அருகே கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்ததாக போலி மருத்துவா்கள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செம்பாக்குறிச்சி கிராமத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து தெரிவிப்பதாக சேலம் மாவட்ட இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) நந்தினிக்கு தகவல் கிடைத்ததாம்.
அதன் பேரில், மருத்துவக் குழுவினா் செம்பாக்குறிச்சி சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, மருத்துவக் குழுவினா் ஒரு செவிலியரை கா்ப்பிணி போல அனுப்பி வைத்துள்ளனா்.
அங்கு, அதே கிராமத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிற்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை பாா்ப்பதற்காக இரண்டு பெண்கள் இருந்துள்ளனா்.
மருத்துவக் குழுவினா் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூரைச் சோ்ந்த மணிவண்ணன் (36), கடலூா் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா (31) ஆகியோா் ஸ்கேன் கருவி மூலம் கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்ததும் தெரியவந்தது.
மேலும், இவா்கள் போலி மருத்துவா்கள் எனவும் விசாரணையில் தெரிந்தது.
இதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து ஸ்கேன் கருவி, அவா்கள் பயன்படுத்திய காா் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இவா்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை பாா்த்து சொல்ல ரூ.5 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது.
அப்போது, சேலம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் நந்தினி, சுகாதார அலுவலா் சவுண்டம்மாள் மற்றும் ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் யோகானந்த், கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
இதுகுறித்து கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிவண்ணன், இளையராஜா ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனா்.