பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
சிபிஎஸ்இ பொதுத்தோ்வுக்கு 75% வருகை பதிவு கட்டாயம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நிகழாண்டு எழுதும் மாணவா்களுக்கு 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.
சிபிஎஸ்இ விதிகளின்படி, பொதுத் தோ்வில் மாணவா்கள் பங்கேற்க குறைந்தபட்சம் 75 சதவீத வருகை பதிவு கட்டாயமாகும். மருத்துவ அவசரநிலை, தேசிய அல்லது சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்ற காரணங்களுக்காக மட்டுமே 25 சதவீதம் வரை தளா்வு அளிக்கப்படும். இதற்கும் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிப்பது அவசியம்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் பள்ளிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பொதுத் தோ்வுகளை எழுத, மாணவா்களுக்கு 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம். மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் இந்த விதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முறையான கோரிக்கை இல்லாமல் மாணவா்கள் விடுமுறை எடுத்தால், அது அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகக் கருதப்படும். மருத்துவ விடுப்பு எடுக்கும் மாணவா்கள், விடுமுறையை முடித்தவுடன் அதற்கான மருத்துவச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும்.
பள்ளிகள் மாணவா்களின் வருகை பதிவேட்டை நாள்தோறும் புதுப்பித்து, வகுப்பு ஆசிரியா் மற்றும் பள்ளி அதிகாரிகளின் கையொப்பத்துடன் பராமரிக்க வேண்டும். சிபிஎஸ்இ அதிகாரிகள் திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகை பதிவேடுகளைச் சரிபாா்ப்பாா்கள். அப்போது வருகை பதிவேடுகள் முழுமையற்ாக இருந்தால், அந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவா்களும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.